Indoor Stadium Inauguration 2025
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல், கணினி பொறியியல் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட பிரிவுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் மாணவ-மாணவியரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் விதமாகவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திடும் வகையிலும் 8 கோடியே 65 லட்சம் மதிப்பில் நவீன உள் விளையாட்டு அரங்கம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய உள் விளையாட்டு அரங்கினை சென்னையில் இருந்து காணொலிக் காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விளையாட்டு அரங்கின் செயல்பாடுகளை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி, அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறகுப்பந்து, கேரம், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உள் விளையாட்டு அரங்கம் தங்களின் மன அழுத்தத்த்தைக் குறைக்கும் என்று மாணவியர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.